ட்ரெண்டிங்

சேலம்- சென்னை இடையே விமான சேவைத் தொடங்கியது!

 

31 மாதங்களுக்கு பிறகு சேலம்- சென்னை இடையே விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

 

சென்னையில் இருந்து கோவா மாநில ஆளுநர் உள்பட 43 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான பயணிகளுக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், மலர்களையும் வழங்கியும் வரவேற்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சேலத்தில் இருந்து 64 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது.

 

நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நண்பகல் 12.30 மணிக்கு சேலத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில், நண்பகல் 12.50 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் விமானம், பிற்பகல் 01.45 மணிக்கு சென்னையைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.