ட்ரெண்டிங்

முடங்கிய இணையதளம்- அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள்!

கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்ட மகளிர் பயனடைந்தனர்.

 

இந்த உரிமைத் தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட சுமார் 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வரும். அதை வைத்து இ- சேவை மையங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்யலாம்; குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

அதைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பித்தார்களுக்கென்று https://kmut.tn.gov.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை அரசு அறிவித்திருந்தது. இன்று முதல் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள இ- சேவை மையங்களில் மக்கள் ஒரே நேரத்தில் குவிந்து விண்ணப்பிக்கத் தொடங்கியதால், இணையதளம் முடங்கியது. இதனால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அந்த வகையில், சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள இ- சேவை மையத்தில் கலைஞர் உரிமைத் தொகைக்கான பிரத்யேக இணையதளம் முடங்கியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

அத்துடன், அங்கிருந்த அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெண்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.