ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த அமைச்சர் பொன்முடி! 

பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த அமைச்சர் பொன்முடி! 

சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள பெரியார்  பல்கலைக்கழகத்தில் 22-வது பட்டமளிப்பு விழா இன்று (நவ.24) காலை 09.30 மணிக்கு நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை, 153 பேருக்கு முனைவர் பட்டத்தையும் வழங்கினார். அத்துடன், பாடங்களில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினார்.

அதேபோல், பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைவுப் பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 42,915 மாணாக்கர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 978 மாணாக்கர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 631 மாணாக்கர்களும் பட்டங்களைப் பெற்றனர்.

விழாவில், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இரா.ஜெகநாதன், பல்கலைக்கழகப் பதிவாளர் கே.தங்கவேல், தேர்வாணையர் பேராசிரியர் எஸ்.கதிரவன் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதனிடையே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார். அதேபோல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள், செனட் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.