ட்ரெண்டிங்

"தருமபுரியில் திட்டத்தைத் தொடங்கி வைத்தது ஏன்?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! 

"தருமபுரியில் திட்டத்தைத் தொடங்கி வைத்தது ஏன்?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! 

தருமபுரி மாவட்டம், தொப்பூரில் நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாமை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மகளிர் சுய உதவிக் குழுக்கள்  திட்டத்திற்கு விதைப் போட்ட மண் தருமபுரி ஆகும். பல தலைமுறைகளைக் கடந்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பயனளிக்கும். கலைஞர் தொடங்கி வைத்த சுய உதவிக்குழுக்கள் தான் பல குடும்பங்களை முன்னேற்றியுள்ளது. 

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 36 லட்சம் மகளிர் தினந்தோறும் இலவசமாகப் பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் சுமார் 4.57 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காலை உணவுத் திட்டத்தை தி.மு.க. அரசுக் கொண்டு வந்தது. காலை சிற்றுண்டித் திட்டம் மூலம் தினமும் 2 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. 

கடுமையான நிதி நெருக்கடியிலும் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையை அரசுத் தொடர்கிறது. இல்லறத்தில் குடும்ப நலனுக்காகப் பணியாற்றும் பெண்களுக்கு தி.மு.க. அரசு அங்கீகாரம் கொடுக்கிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே முதன்மையான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் மாறும். 

யாருக்கெல்லாம் ரூபாய் 1,000 அவசியமோ, அவர்களுக்கு எல்லாம் ரூபாய் 1,000 உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது. மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்று சேர்ந்துவிடும். எந்த இடையூறும் இல்லாமல், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 தடையில்லாமல் செலுத்தப்படும். கட்டுமான பணியில் ஈடுபடும் மகளிர், மீனவ பெண்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெறுவர். 

ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உறுதிச் செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.