ட்ரெண்டிங்

பொதுமக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர்! 

சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., ஆத்தூர் மல்லியக்கரையில் முகாமிட்டு "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (பிப்.22) கள ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமானது, நேற்றைய தினம் காலை 09.00 மணிக்கு தொடங்கி, சேலம் மாவட்டம். ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட 30 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் நேற்றைய தினம் குடிநீர் பணிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசு ஆரம்ப சுகாதார
நிலையங்கள், தெரு விளக்குகளின் செயல்பாடுகள் என இரவு வரை ஆய்வு செய்து, ஆத்தூர் வட்டத்திலேயே தங்கி இன்றைய தினம் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இன்றைய தினம் காலை 06.00 மணி முதல் கீரிப்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கீரிப்பட்டி மற்றும் பைத்தூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து, சமையறை சுகாதாரமான முறையில்

பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும், குறித்த நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் பரிமாறப்படுவது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ்,பிப்ரவரி 21, 22 ஆகிய இரண்டு நாள்கள் ஆத்தூர் வட்டத்தில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கள ஆய்வு குறித்த அறிக்கையினை இன்றையதினம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் மனுக்களின்மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.