ட்ரெண்டிங்

10 நாட்களில் 16 அடி உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 16 அடி உயர்ந்துள்ளது. இது கவலையில் இருந்த விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

 

தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை வழங்குமாறு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், கர்நாடகா அரசு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த சூழலில், தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 15.77 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 10- ஆம் தேதி அன்று அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக இருந்த நிலையில், இன்று (அக்.20) 46.67 அடியாக அதிகரித்துள்ளது.

 

இன்று (அக்.20) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7,355 கனஅடியில் இருந்து 7,714 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 45.62 அடியில் இருந்து 46.67 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 15.78 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் அணை மின் நிலையம் வெளியேற்றப்படுகிறது.