ட்ரெண்டிங்

மளமளவென உயர்ந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில் 8.30 அடி உயர்ந்துள்ளது.

 

தமிழகம்- கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணையின் கிளை நதிகளான பாலாறு மற்றும் தொப்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த வியாழன்கிழமை வினாடிக்கு 9,345 கனஅடியாக வந்துக் கொண்டிருந்த தண்ணீர், அன்று மாலையே 18,974 கனஅடியாக அதிகரித்தது.

 

வினாடிக்கு 15,000 கனஅடிக்கும் குறையாமல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், கடந்த மூன்று நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 8.30 அடி உயர்ந்துள்ளது. பாலாறும், காவிரியும் இணையுமிடத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து மேட்டூர் அணையை நோக்கிச் செல்கிறது.

 

இன்று (அக்.14) மாலை 04.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,547 கனஅடியில் இருந்து 18,633 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 38.60 அடியில் இருந்து 39.63 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 11.90 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது.