ட்ரெண்டிங்

பள்ளி வளாகத்தில் மனிதக்கழிவு- கோட்டாட்சியர் ஆய்வு!

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காவேரிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 136 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதேபோல், ஆசிரியர்கள் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக்.30) காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

 

அப்போது, பள்ளியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து பள்ளியின் சமையலறை கூடத்திற்கு சென்று பார்த்த மாணவர்கள், சமையலறைக் கூடத்தின் சுவற்றில் மனிதக் கழிவுகளைப் பூசி மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

இதனால் மதிய உணவு இப்பள்ளியில் தயார் செய்யாமல், அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் உணவு தயார் செய்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 

தகவல் அறிந்து பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் மது குடித்தல், கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக உள்கட்டமை வசதிகளை மேம்படுத்தி இரவு நேர காவலாளிகளை நியமித்து, பள்ளி சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

 

பள்ளியின் சமையலறைக் கூடத்தின் சுவற்றில் மனிதக் கழிவுகளைப் பூசி சென்ற மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் சமையல் கூடம் சுத்தம் செய்யப்பட்டது.

 

இது குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வுச் செய்து, விசாரணை நடத்தினார்.