ட்ரெண்டிங்

டி.எம். செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து!

 

சுடுகாட்டு கூரை அமைத்தது தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதிக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்துச் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

 

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி ஆகிய மூன்று பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த 2014- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டி.எம்.செல்வகணபதி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (நவ.28) காலை 11.00 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

 

தற்போது தி.மு.க.வில் உள்ள முன்னாள் டி.எம்.செல்வகணபதி, இந்த வழக்கு காரணமாக, கடந்த 9 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில், சுடுகாட்டு கூரை அமைத்தது தொடர்பான வழக்கில் இருந்து விடுதலையான நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டி.எம்.செல்வகணபதிக்கு அக்கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.