ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து இரவு நேரத்திலும் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை - எஸ்.ஆர்.பார்த்திபன் எம்

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு உள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இந்த நிலையில், சேலம்- சென்னை, சென்னை- சேலம் வழித்தடத்தில் ட்ரூஜெட் நிறுவனம், தினசரி விமான சேவையை வழங்கி வந்தது. இதனிடையே கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையைத் தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார். அத்துடன், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, பலமுறை கோரிமை மனுக்களை வழங்கிய நிலையில், சேலம் விமான நிலையத்தை உதான் 5.0 திட்டத்தின் கீழ் இணைத்து, விமான சேவையைத் தொடங்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதியை வழங்கியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சேலம் விமான நிலையத்தில் இருந்து வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் அலையன்ஸ் ஏர் நிறுவனமும், அக்டோபர்- 29- ஆம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் விமான சேவைகளைத் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதிக் கட்ட பணிகளை சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், உதான் 5.0 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவைத் தொடங்க இரண்டு விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி, அக்டோபர் 16- ஆம் தேதி முதல் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் -சேலம் -கொச்சின் வழித்தடத்தில் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் கொச்சின் - சேலம் -பெங்களூர் வழித்தடத்தில் விமானங்கள் இயக்கப்படும்.

வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் இந்த வழித்தடத்தில் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில், அக்டோபர் 29- ஆம் பெங்களூர் - சேலம்- ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவையைத் தொடங்கவுள்ளது. மறுமார்க்கத்தில் ஹைதராபாத்- சேலம்- பெங்களூர் வழித்தடத்தில் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த வழித்தடத்தில், வாரத்தின் நான்கு நாட்களுக்கு இண்டிகா நிறுவனம், விமான சேவையை வழங்கும்.

திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவை நடைபெறும் இதேபோன்று வாரத்தின் ஏழு நாட்களிலும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது. சேலம்- சென்னை வழித்தடத்தில் விமான சேவையும் அக்டோபர் 29- ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்குவதால், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள்,வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சேலம் மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை விமானங்கள் சேர்ந்து வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து விமான சேவை இரவு நேரத்திலும் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 250 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நிலம் எடுக்கப்பட்டு, தற்போது 6,000 அடி நீளம் கொண்ட விமான நிலைய ஓடுபாதை 8,000 அடி நீளம் ஓடு பாதையாக மாற்றப்பட உள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும், சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.