ட்ரெண்டிங்

மேட்டூர் அணை- நாளை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீர் நாளை (அக்.07) முதல் முழுமையாக நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி அன்று சம்பா தாளடி குறுவைச் சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும், ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை சரியாக பெய்யததாலும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்காததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. குறிப்பாக, அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்தது.

 

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடிக்கு கீழ் சரிந்ததால், டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3,000 கனஅடியில் இருந்து 2,300 கனஅடியாக இன்று (அக்.07) குறைக்கப்பட்டது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நாளை (அக்.08) முழுவதுமாக நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

நான்கு மாதங்களுக்கு பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.