ட்ரெண்டிங்

நீர்வரத்து குறைந்ததால் குட்டை போல் மாறிய மேட்டூர் அணை!

நீர்வரத்து சொற்ப அளவே உள்ளதால் மேட்டூர் அணை குட்டைப் போல் மாறியுள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும், பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில், உரிய அளவில் திறக்கப்படாத காரணத்தால், அணைக்கு நீர்வரத்து குறைந்தும், தண்ணீர் திறப்பு அதிகமாகவும் இருந்தது.

 

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்தது. அதைத் தொடர்ந்து, டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டதால், தண்ணீர் கடைமடை வரை செல்லாததால், குறுவைச் சாகுபடி பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடும் அறிவித்துள்ளது. எனினும், அந்த தொகை போதுமானதாக இல்லை சென்று விவசாயிகள் கூறுகின்றனர்.

 

இன்று (அக்.08) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 154 கனஅடியில் இருந்து 139 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,300 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.25 அடியில் இருந்து 31.72 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 8.22 டி.எம்.சி.யாக உள்ளது.

 

இந்த சூழலில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நாளை (அக்.09) நிறுத்தப்படும் என்றும், குடிநீருக்கு தேவைக்காகத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே, மேட்டூர் அணைக்கு சொற்ப அளவே தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், மேட்டூர் அணை குட்டைப் போல் காட்சியளிக்கிறது.