ட்ரெண்டிங்

வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது என தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்!

 

வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு, குடும்ப ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜன.09) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சி.ஐ.டி.யு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தனர்.

 

இதையடுத்து, சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் ஆகியோர் தலைமையில் மூன்றாவது முறையாக இன்று (ஜன.08) முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டப்படி நாளை (ஜன.09) வேலை நிறுத்தம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தலைவர் சவுந்தரராஜன், ""கோரிக்கைகளை ஏற்க அரசு தரப்பு மறுப்பு தெரிவித்தது; கோரிக்கைகள் மீது இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது என அரசுக் கூறியுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை பொங்கலுக்கு பின் பேசிக் கொள்ளலாம் என அரசுக் கூறியது; போக்குவரத்துத்துறை தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசுப் பார்க்கிறது. போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்களை அரசு வஞ்சிக்கிறது. எனவே, திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்; வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்ததாவது, "போக்குவரத்துத்துறைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி நடைபெறும். வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

 

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் அறிவிப்பால், இன்று (ஜன.08) நள்ளிரவு 12.00 மணி முதல் எந்த அரசுப் பேருந்துகளும் ஓடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.