பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் இன்று (அக்.20) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில் கடந்த கால நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படும் இடங்கள் மற்றும் பட்டாசுக் கடைகளைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பாதுகாப்பு நலன்களைக் கடைபிடிப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் 100 சதவிகிதம் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களைத் தொடர் ஆய்வு கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக செய்து பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளைச் சேர்ந்த அலுவலர்களைக் கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வுகளை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக்குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்தும் இன்றைய தினம் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளைத் தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப்படாமல் செயல்பாடற்றுள்ள 11 நிறுவனங்களுக்கு விளக்கம்கோரி, உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள பட்டாசு வெடிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். மாவட்டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதிமீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தீபாவளிக்கென தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே, தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப.தெரிவித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)