ட்ரெண்டிங்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சரிவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பின் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜூன் முதல் அக்டோபர் மாதங்கள் வரை சரிவர பருவமழை பெய்யாததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் வந்துச் சேராததாலும் குறுவைச் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், குறுவைச் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 13,500 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இந்த சூழலில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41 ஆண்டுகளுக்கு பின் 35 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 1982- ஆம் ஆண்டு அக்டோபர் 06- ஆம் தேதி இதே அளவிலே நீர்மட்டம் இருந்துள்ளது. எனினும், கடந்த 2022- ஆம் ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்துள்ளது.

 

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், தற்போது 16 கண் பகுதியில் ஷட்டர் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல், உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதி, வறண்டு காணப்படுகிறது.