ட்ரெண்டிங்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்லும்- எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை!

சேலம் மாவட்டம், எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறாது. அதை தேர்தலுக்குப் பின்னரே உறுதியாகச் சொல்ல முடியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க. தி.மு.க.விடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதேபோன்று 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 10 தொகுதிகளிலும், ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும்வாய்ப்புள்ளது. கடந்த இரண்டரை மாத தி.மு.க. ஆட்சி, மிக மோசமாக மக்கள் விரோதமாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வீட்டு வரி, குடிநீர்  வரி 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை மிக மிக சாதகமாக உள்ளது.
 
 தி.மு.க. பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியில் தான் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் தொகுதிகளைப் பங்கீட ஆம் ஆத்மி விரும்பவில்லை. மத்திய பிரதேசத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை தனியே அறிவித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் என பொருந்தா கூட்டணியாகவே இந்தியா கூட்டணி உள்ளது,என்று விமர்சித்துள்ளார்.