ட்ரெண்டிங்

இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு தொடர்பான ஆட்சியர் கார்மேகத்தின் அறிவிப்பு!

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு வரும் டிசம்பர் 02- ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

 

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது,சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது. டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2024- ஆம் ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) எட்டாம் வகுப்பில் சேருவதற்கான RIMC தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் வரும் டிசம்பர் 02- ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

 

 

இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

 

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01/07/2024 அன்று 11 1/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02/07/2011- க்கு முன்னதாகவும் 01/01/2013- க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

 

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600003 என்ற முகவரிக்கு 15/10/2023 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in-ல் பார்க்கவும் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் தொலைபேசி எண் 0427-2902903 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.