ட்ரெண்டிங்

முழு அடைப்பு காரணமாக, மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக,  தமிழக எல்லையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கன்னட அமைப்புகள் நடத்தி வரும் மாநில தழுவிய போராட்டத்தால் மேட்டூர் அருகே காரைக்காடு சோதனைச் சாவடியிலேயே தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

 அதனால், மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு அம்மாவாசை, பௌர்ணமி தினத்தன்றும், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு தமிழக மக்கள் சென்று வருவர். அதற்காக, கர்நாடகாவில் முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையிலும், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்வதற்காக, பயணித்த வண்ணம் உள்ளனர்.

அவர்களது வாகனங்கள் அனைத்தும் காரைக்காடு பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. அதனால் சிறிது தூரம் நடந்துச் சென்று கர்நாடகா பதிவெண் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாதேஸ்வரன் கோயிலுக்கு பலர் செல்கின்றனர். அதே சமயம், பாலாறு சோதனைச் சாவடி வழியாக கர்நாடகா பதிவெண் கொண்ட கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், தமிழக எல்லைக்குள் வந்துச் செல்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு மாநில காவல்துறையினரும், எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.