ட்ரெண்டிங்

தகாத உறவில் இருந்து வந்த பெண் மர்ம மரணம்! 

தகாத உறவில் இருந்து வந்த பெண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள ஆழப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். பூச்சி மருந்து கடையை நடத்தி வரும் இவர், தனது கடையில் பூச்சி மருந்து வாங்கிய ஒருவர், அதனை குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், உயிரிழந்த பெண் தருமபுரி மாவட்டம், சித்தேரியைச் சேர்ந்த சுமதி என்பது தெரிய வந்தது. திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், பூச்சி மருந்து கடை நடத்தி வரும் சுரேஷ் உடன் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்ததாகவும், சுமதியின் விவாகரத்துக்கு பிறகு இருவரும் பேசி பழகி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இருவரிடையே ஏற்பட்ட தகராறில், பெண் தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.