ட்ரெண்டிங்

வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி! 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்தனுப்பும் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப. மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆகியோர் இன்று (ஏப்ரல் 08) மாவட்ட ஆட்சியரகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,260 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units), கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Units) மற்றும் வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் (First Randomization) ஒதுக்கீடு செய்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு அதற்குரிய வைப்பு அறையில் (STRONG ROOM) காவல் துறை பாதுகாப்புடன் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு தேவைப்படும் பல்வேறு பொருட்கள் தொடர்ச்சியாக அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்சியாக, இன்றைய தினம் வாக்குப்பதிவிற்கு தேவைப்படும் முத்திரைகள், பென்சில்கள், பேனாக்கள், A4 தாள்கள், மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட 34 வகையான பொருட்கள் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருவதை பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப.
மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் அலுவலர்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குரிய பொருட்களை அதற்கான பொறுப்பு அலுவலர்களிடமும் நேரில் ஒப்படைத்திட உரிய அறிவுரைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார்.