ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு- உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவு!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வந்துள்ள புகார்களுக்கு தேவையான ஆவணங்களை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

பணியாளர் நியமனத்தில் முறைகேடு, துணைவேந்தர் மீதான இரட்டை ஊதியம் என பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பான விசாரணையில் கேட்கப்பட்ட ஆவணங்களை இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளர், பெரியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

 அதில் பெரியார் பல்கலைக்கழகம் மீதான புகார்கள் அடிப்படையில், உயர்கல்வித்துறைக் கூடுதல் செயலாளர்கள் பழனிசாமி மற்றும் இளங்கோ ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை நான்கு முறை விசாரணை நடத்தினர். கடந்த மே மாதம் 29- ஆம் தேதி சம்மந்தப்பட்டவர்களிடம் பல்கலைக்கழகத்தில் நேரடி விசாரணையும் நடத்தப்பட்டது.

 

இந்த விசாரணையின் அடிப்படையில், பல்வேறு ஆவணங்கள் கேட்கப்பட்டிருந்தனர். ஆனால் இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம், ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த அடுத்த இரண்டு வார காலத்திற்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால், அரசிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் உறுதிச் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.