ட்ரெண்டிங்

ஒரு மாதத்திற்கு பிறகு உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், ஒரு மாதத்திற்கு பிறகு அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

இன்று (செப்.25) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,639 கனஅடியில் இருந்து 8,181 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக அணைமின் நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கீழ்மட்ட ஐந்து கண் மதகு வழியாக வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு பிறகு 37.57 அடியில் இருந்து 37.85 அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர் இருப்பு 11.00 டி.எம்.சி.யாக உள்ளது.

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடுவர் என்றால் மிகையாகாது.