ட்ரெண்டிங்

குடும்பத்துடன் விவசாய நிலத்தில் இறங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி!

 

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கடந்த மூன்று தலைமுறையாக விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், நிலத்தை காலி செய்யும்படி மிரட்டல் விடுப்பதாகக் கூறி, விவசாய நிலத்தில் இறங்கி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

தென்னை மரங்கள், தீவன தட்டுகள் பயிரிட்டு விளைந்து வரும் நிலையில் அழித்துவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்வோம் என்று கதறி அழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தையும், விவசாயத்தையும் காப்பாற்றுங்கள் என்று கூறி விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை நம்பி 15 விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இதற்கு முன்பாக பயிரிட்டு வைத்திருந்த பயிர்களையும், தென்னை மரங்களையும் அழித்துவிட்டதாக விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் நிலத்தின் மீது நிலத்தின் உரிமையாளர் மோகன் என்பவர் வங்கியில் கடன் வாங்கி இருக்கும் நிலையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கியிடமிருந்து நிலத்தை ராமராஜன் என்பவர் வாங்கி விட்டதாகக் கூறி, அடியாட்களுடன் மிரட்டல் விடுவதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குடும்பத்துடன் விவசாயம் செய்த நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.