ட்ரெண்டிங்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, சேலம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனை அமோகம்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, இன்று (செப்.23) சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், இளம்பிள்ளை, எடப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றனர். இன்று (செப்.23) புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக சூரமங்கலம் உழவர் சந்தையில் 46,400 கிலோ காய்கறிகள் விற்பனையாகின. அதேபோல், ஆத்தூர் உழவர் சந்தையில் 45,980 கிலோ காய்கறிகளும், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் 36,121 கிலோ காய்கறிகளும், அம்மாப்பேட்டை உழவர் சந்தையில் 15,707 கிலோ காய்கறிகளும் விற்பனையாகின. ஒரேநாளில் மட்டும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் மொத்தம் 2.6 லட்சம் கிலோ அளவிலான காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.  அதேபோல், வாழை இலை, பூக்கள், பழங்கள் ஆகியவையின் விற்பனையும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.