ட்ரெண்டிங்

பிரபல உணவகங்களில் இருந்து 100 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

நாமக்கல் மாவட்டத்தில் அசைவ உணவகம் ஒன்றில் ஷெவர்மா என்ற துரித உணவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில், மற்ற 43 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாநகரில் உள்ள அசைவ உணவகங்களில் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகார கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று (செப்.20) அதிரடி சோதனை நடத்தினர். ஐந்து ரோட்டில் உள்ள பிரபல இரண்டு அசைவ உணவகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவுகளைப் பறிமுதல் செய்தனர்.

 

அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட இரண்டு உணவகங்களுக்கும் அபராதம் விதித்ததுடன், நோட்டீஸ் வழங்கி உணவகங்களை மூட உத்தரவிட்டுள்ளனர்.

 

சேலம் மாநகரில் தொடர்ந்து சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன இறைச்சிகளை கிலோக் கணக்கில் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், உணவகங்களில் சோதனை தொடரும்; சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.