ட்ரெண்டிங்

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 07.00 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 07.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் சேவை வரும் அக்டோபர் 01- ஆம் தேதி முதல் நவம்பர் 26- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

 

அதேபோல், மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இரவு 07.45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சேவை வரும் அக்டோபர் 02- ஆம் தேதி முதல் நவம்பர் 27- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

 

தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர், கோவை, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.