விளையாட்டு

மாநில அளவிலான சாஃப்ட் டென்னிஸ் போட்டி- சேலம் அணி இரண்டாமிடம்!

ஓமலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாஃப்ட் டென்னிஸ் போட்டியில், வேலூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது.

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெற்ற மாநில அளவிலான 14-வது சாஃப்ட் டென்னிஸ் போட்டிகள், மாவட்ட சாஃப்ட் டென்னிஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை சாஃப்ட் டென்னிஸ் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.

 

இதில் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 280 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். குழு போட்டியில் ஆடவர் பிரிவில் வேலூர் அணி முதலிடமும், சேலம் அணி இரண்டாமிடமும் பிடித்தனர். மகளிர் பிரிவில் வேலூர் அணி முதலிடத்தையும், சேலம் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். ஒற்றையர் ஆடவர் பிரிவில் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் முதலிடமும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யஸ்வந்த் இரண்டாமிடமும், வேலூரைச் சேர்ந்த ஸ்ரீராம், கரூரைச் சேர்ந்த கார்த்திக், விஷால் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

 

மகளிர் பிரிவில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்முகை முதலிடமும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யாழினி இரண்டாமிடமும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாலினி மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோர் மூன்றாமிடமும் பிடித்தனர்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சாஃப்ட் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.