ட்ரெண்டிங்

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.  

 

கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,556 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர் இருப்பு 12.28 டி.எம்.சி.யாக இருக்கும் நிலையில், மின் நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரும், கீழ்மட்ட ஐந்து கண் மதகு வழியாக 3,500 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 6,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

மொத்தமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக, தண்ணீர் திறக்க முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

 

இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி நடவுப் பணியைச் செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர்களை அறுவடை செய்ய முடியுமா எனக் கவலையடைந்துள்ளனர்.