ட்ரெண்டிங்

"காவல்துறையினர் நடுநிலைத் தவறாமல் செயல்பட வேண்டும்"- காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 11) காலை 11.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பெரிய நிகழ்வாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நச்சுக் கருத்தைப் பரப்புவோரால் தான் சமூக அமைதி சீர்குலைக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதிச் செய்ய வேண்டும். பெண்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றின் சட்டவிரோத விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. 

காவல் நிலையங்களில் சட்டப்படி செயல்படாமல் அங்கேயே பேசி முடித்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் நடுநிலை தவறாமல் காவல்துறைச் செயல்பட வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். குற்றம் குறைந்திருக்கிறது என்ற புள்ளி விவரம் வேண்டாம்; குற்றமே இல்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை" என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் இ.கா.ப., துறைச்செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.