ட்ரெண்டிங்

அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் ஆறுதல்!

அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் ஆறுதல்! 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, அணைக்கு நீர்வரத்து 6,000 அடியாக அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (செப்டம்பர் 03) காலை 08.00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 5,018 கனஅடியில் இருந்து 6,430 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக சுரங்கம் மின் நிலையம் வழியாக வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அணைக்கு நீர்வரத்து குறைவாகவும், நீர் திறப்பு அதிகமாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் 48.48 அடியில் இருந்து 48.24 அடியாகச் சரிந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 16.72 டி.எம்.சி. யாக உள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தாலும், நீர்வரத்து அதிகமாக இருப்பது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.