ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர

 

சேலம் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொலைதூர அணுக முடியாத கிராமங்களில் விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்குதல் மற்றும் விவசாயிகளிடையே கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சேலம் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு 20 முகாம்கள் என்ற விகிதத்தில் 400 முகாம்கள் கால்நடை சேவைகள் கிடைக்க இயலாத தொலைதூர கிராமங்களில் வரும் அக்டோபர் 31- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள தொலைதூர கிராமங்கள் அனைத்து மாவட்டங்களிலும் பட்டியலிடப்படும்.

 

அதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தில் இடம்பெறும் கிராமங்களில் முகாம் நடத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு கால்நடைகளின் தொகை அடர்த்தி மற்றும் கால்நடை நிலையங்களின் தொலைதூரத்தின் அடிப்படையில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 கிராமங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்படும். இந்த முகாம்களில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அணித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல். மலடுநீக்க சிகிச்சைகள்,சினைசரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

 

முகாமின் போது அறுவை சிகிச்சை சிறப்பு மகப்பேறியல் மருத்துவ உதவி தேவைப்படும் மற்றும் மலட்டுத்தன்மை உள்ள கால்நடைகள் அடையாளம் காணப்பட்டு பின்தொடர் சிகிச்சை அட்டை வழங்கப்படும்.சிகிச்சையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான கால்நடை உரிமையாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் பெறப்பட்டு முகாமிற்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களால் பின்தொடர் சிசிக்சை மேற்கொள்ளப்படும்.

 

மேலும், சுகாதார முகாம்கள் முறையான முன் விளம்பரத்துடன் ஏற்பாடு செய்யப்படும். அதாவது முகாம் நடைபெறும் கிராமங்களில் இடம் மற்றும் நாள் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு முகாம்கள் நடைபெறும். எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளைப் பெருந்திரளாகக் கொண்டு வந்து சிகிச்சைப் பெற்று செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.