ட்ரெண்டிங்

பாமக எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காவல்துறையினரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் மீது அவரது மருமகள் மேட்டூர் காவல் நிலையத்திற்கு சென்று தன்னை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும், ஆஜராகாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால், எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் இன்று (செப்டம்பர் 01) பிற்பகல் 03.00 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை. எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். 

இதையேற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் கோரிய எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் மனுவை வரும் செப்டம்பர் 07- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.