கடந்த ஆகஸ்ட் 04- ஆம் தேதி அன்று தலைநகர் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்தித்த சேலம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான சேவையைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மேலும் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், பயணிகளின் வசதிகளுக்காக விமான நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 28- ஆம் தேதி அன்று சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "சேலம் விமான நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை அமர்த்துவது குறித்து உள்நாட்டு விமான போக்குவரத்துறையிடம் தங்கள் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும், சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் பரிந்துரையில் உள்ளது. மேலும், தங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.



-hcTFAGMRGb.jpg)