ட்ரெண்டிங்

அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது!

ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து சேலம் வழியாக குட்கா, கஞ்சா உள்ளிட்டப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சேலம் ரயில்வே காவல் நிலையத்தின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சேலம் வழியாக செல்லும் ரயில்களை ரயில் நிலையத்திலும், ரயில் நிலையத்திற்கு முன்னதாக நடுவழியில் நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக, பிலாஸ்பூர்- எர்ணாகுளம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (ஆகஸ்ட் 30) காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு வந்துக் கொண்டிருந்தது. பகல் 12.00 மணியளவில் தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே வந்த ரயிலை நிறுத்தி ரயில்வே காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 

அதில், பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, இரண்டு பைகளில் இருந்த 16 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த பைகளைக் கொண்டு வந்த, சேலம் மாவட்டம், சிவதாபுரத்தைச் சேர்ந்த சிவா (வயது 50) என்பவரை கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர  மாநிலம், விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த ரயில்வே காவல்துறையினர், சேலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.