ஆன்மிகம்

தங்கக் கவசத்தில் ஜொலித்த கடைவீதி சேலம் ராஜகணபதி!

 

கார்த்திகை மாதப் பிறப்பு: தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த கடைவீதி ராஜகணபதி!

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சேலம் கடைவீதி ராஜகணபதி திருக்கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் ராஜகணபதியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான கடைவீதி ராஜகணபதி திருக்கோயிலில், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளிலும் மூலவர் ராஜகணபதிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ராஜகணபதியை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் செல்வச் செழிப்பு வேண்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.