ட்ரெண்டிங்

தொடர் விடுமுறை எதிரொலி- மேட்டூர், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை என தொடர்ந்து விடுமுறை வந்ததாலும், சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

 

குறிப்பாக, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்வதாலும், அதிகாலை நன்கு குளிர்ச்சி நிலவுவதாலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுத்துள்ளனர். இன்று (அக்.01) ஞாயிற்றுக்கிழமை என்பதால், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஏற்காட்டில் குவிந்ததால் ஏற்காடு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, வாகனவோடிகளும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.

 

சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீரென அதிகரித்ததால், சாலையோர கடைகளில் தின்பண்டங்களின் விற்பனை அதிகரித்திருந்தது.

 

அதேபோல், மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மேட்டூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. அத்துடன் மீன் வியாபாரமும் களைக்கட்டியது.