ட்ரெண்டிங்

அரசு பள்ளியில் அசத்தல் கொலு பொம்மைகளுக்குப் பதிலாகப் புத்தகங்கள்!

 

சேலம்: நவராத்திரி என்றாலே வீடுகளில் கொலு பொம்மைகள் அணிவகுப்பது வழக்கம். ஆனால், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எட்டிக்குட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொம்மைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களை வைத்து அறிவே ஆயுதம் – அறிவுக் கொலு 2026 நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கி, அவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புதுமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்நிகழ்ச்சி, கல்வியின் முக்கியத்துவத்தையும் புத்தக வாசிப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சிக்குப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் மு. ஜெகநாதன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் நந்தினி, துணைத் தலைவர் மைதிலி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். குழு உறுப்பினர் சத்தியராஜ் நன்றியுரை வழங்கினார்.

“வாசிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!” என்ற முழக்கத்துடன், வாசகர்களாகத் தொடங்கி சிறந்த எழுத்தாளர்களாக உயர வேண்டும் என்ற இலக்கை மாணவர்களிடம் விதைக்கும் வகையில் அறிவுக் கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.