சேலம்: விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளையொட்டி, சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 10 நாட்களாக கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மாநகரின் முக்கிய பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் ராஜகணபதியை தரிசனம் செய்து வந்தனர்.
விநாயகர் சதுர்த்தி நிறைவு நாளான இன்று, பக்தர்கள் வழங்கிய 1,008 லிட்டர் பாலை கொண்டு ராஜகணபதிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக தயிர், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அபிஷேகத்தை தரிசித்து, ராஜகணபதியை வழிபட்டு பக்தர்கள் சென்றனர்.



