ட்ரெண்டிங்

சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டிப் போட்டிகள் நடைபெறும்- மாவட்ட ஆட்சியர் கார்ம

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ. ஆ.ப. அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சேலம் மாவட்டத்தில் 2023- ஆம் ஆண்டிற்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 06.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

 

இப்போட்டியில் பங்கேற்கும் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 01/01/2011, 01/01/2009 மற்றும் 01/01/2007-க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இவர்கள் 15 கி.மீ., (13 வயதிற்குட்பட்டவர்கள்), 20 கி.மீ. (15) வயதிற்குட்பட்டவர்கள்) மற்றும் 20 கி.மீ. தூரம் (17 வயதிற்குட்பட்டவர்கள்) கடக்க வேண்டும். அதேபோல் 13 வயது, 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 01/01/2011, 01/01/2009 மற்றும் 01/01/2007 க்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். இவர்கள் 10 கி.மீ. (13 வயதிற்குட்பட்டவர்கள்), 15 கி.மீ. (15 வயதிற்குட்பட்டவர்கள்) மற்றும் 15 கி.மீ. (17 வயதிற்குட்பட்டவர்கள்) தூரம் கடக்க வேண்டும்.

 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூபாய் 5,000, இரண்டாம் பரிசாக ரூபாம் 3,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 மற்றும் நான்கு முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 250 வழங்கப்படும். பரிசுத் தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கிமாற்று வழி மூலமாகமோ மட்டுமே வழங்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக வழங்கப்படமாட்டாது.

 

போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றுடன் போட்டி நடக்கும் தேதிக்கு முன்னரோ அல்லது போட்டி நடக்கும் அன்றோ பதிவு செய்துக் கொள்ள வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகல கிராங்க் பொருத்தப்பட்டிருத்தல் கூடாது. மிதிவண்டி பந்தயத்தில் ஏதேனும் தனிப்பட்ட பொது இழப்பு ஏற்படின் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பாவர். 

 

போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை அலுவலக நேரத்தில் அணுகி பெயரினைப் பதிவு செய்து கொள்ளலாம். போட்டியின் முடிவு நடுவர் தீர்ப்பிற்குட்பட்டது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தினைத் தெளிவாக கணக்கு எண் தெரியும்படி கொண்டு வருதல் வேண்டும்.

 

13 வயதிற்குட்பட்ட மாணவிகள் 10 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி கோரிமேடு சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள், 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் 15 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஆபீஸ் வழியாகச் சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது.

 

15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீ. தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி ஏற்காடு அடிவாரம், எம்ரால்ட்வேலி பள்ளி வழியாக மீண்டும் ஏற்காடு அடிவாரம், அஸ்தம்பட்டி, மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைகிறது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் குறிப்பிட்டுள்ளார்.