5 மாவட்ட குப்பைகளை சேலத்தில் குவிக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் மேயர் புகார்
குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தல்
சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதியில் குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில், குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்காக ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து எரிசக்தி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் இத்திட்டத்திற்காக நிலம் ஒதுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சியின் தீர்மானம் ஏற்கப்படாமல் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மேயர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சேலம் குப்பை நகரமாக மாறிவிடும்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:
"குப்பையில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகரப் பகுதியில் குப்பையில் இருந்து எரிசக்தி ஆலை அமைக்கப்படுவதால் மாநகர மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காற்று மாசுபடும் நிலையும் உருவாகும்.
ஏற்கனவே சேலம் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கே இடமில்லாத சூழல் உள்ளது. இந்நிலையில் 5 மாவட்டங்களின் குப்பைகளையும் சேலத்திற்கு கொண்டு வந்தால், சேலம் குப்பை நகரமாக மாறிவிடும். இதனை அனுமதிக்க முடியாது."
என மேயர் தெரிவித்தார்.
மேலும், 5 மாவட்டங்களின் குப்பைகளை ஒரே இடத்தில் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.



-SXgDfGgJfO.jpg)