சேலம் ராஜகணபதி கோவிலில் கோலாகல கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேலம் மாநகர் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இதற்காக கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, தொடர்ந்து கோவில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
கடந்த ஜூன் 16ஆம் தேதி ராஜகணபதி கோவிலில் 15 அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கடந்த 28ஆம் தேதி முதல் யாக பூஜைகள் தொடங்கி, நேற்று இரவு வரை மூன்று கால ஹோமங்கள் நடைபெற்றன.
கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணி முதல் திருமுறை பாராயணம், பாவனாபிஷேகம், வெள்ளை சாத்துப்படி, நான்காம் கால யாக பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து காலை 7.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தலைமை குருக்கள் புனித தீர்த்த கலசங்களை தலையில் சுமந்தபடி யாகசாலையில் இருந்து ஊர்வலமாக ராஜகணபதி கோவிலுக்கு வந்தடைந்தனர்.
பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு காலை 8.10 மணியளவில் ராஜகணபதி கோவில் விமானம் மற்றும் முகப்பு விமான கலசங்களில் புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புதிய கொடிமரம், மூஷிக வாகனம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் கலசப் பகுதியில் ஏராளமான கருடன்கள் வானில் வட்டமிட்டதாகக் கூறப்படுவது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
பின்னர் மூலவர் ராஜகணபதிக்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை அணிவித்து வண்ண மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டார். மேலும், ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



