ஆன்மிகம்

அ.தி.மு.க. ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்- முன்னாள் அமைச்சர் செம்மலை! 

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் நகராட்சி அலுவலகம் எதிரே இன்று (டிச.23) காலை 11.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, அ.தி.மு.க. ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இந்த ஆட்சியின் நிலைப்பாட்டை எண்ணி சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு எடுக்க வேண்டும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி. ஆனால் அண்ணனுடையான் படைக்கு அஞ்சான் என்பது புது மொழி என்ற புது மொழிக்கு ஏற்ப எடப்பாடியார் இருக்கும் வரை யாரும் அஞ்ச வேண்டாம். 2026- ல் தொண்டர்கள் உழைக்க வேண்டும். தி.மு.க. செயற்குழுவில் 200 தொகுதிகளில் தி.மு.க. கைப்பற்றும் என்று பேசுகிறார்கள் .

அ.தி.மு.க. 200 தொகுதிகளுக்கு கூடுதலாக கைப்பற்றும், மக்கள் முடிவு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று இருக்கையில் எப்படி பிடிப்பார்கள். முதலமைச்சர் எடப்பாடி தான் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் கொரோனா காலத்தில் எந்த வரியும் விதிக்காமல் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்தார்; இந்த பகுதி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கெங்கவல்லி தொகுதியில் ஆட்டுப்பண்ணை உள்ள இடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்காவை எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பூங்காவை திறக்காமல் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது; மேட்டூர் காவிரி உபரி நீரை வறண்ட ஏரிகளுக்கு 527 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கொண்டு வந்தார்;

ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட அந்தஸ்து உள்ள மருத்துவமனையாக தரம் உயர்த்தி கொடுத்தார் எடப்பாடியார். தமிழகத்தில் நிர்வாகம் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் நிர்வாக திறமை உள்ளவராக இருக்க வேண்டும். முதல்வருக்கு எதுவும் தெரியாது என்றும், மருத்துவத் துறையில் தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளது. முதல்வர் பெருமையாக சொல்கிறார் அடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி என்றும் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவோம் என்கிறார். கூட்டணி பலம், பணபலம் செல்லாது; தி.மு.க. கூட்டணி சிதறிவிடும் என்றும், 2026 -ல் அ.தி.மு.க. பெரிய கோடு தி.மு.க. அதில் சிறிய கோடு தான். கடன் வாங்கியதில்  தான் தமிழகம் முதலிடம் 8,34,544 கோடி கடன் வாங்கி உள்ளார்கள். நம் மாநிலத்தை விட பெரிய மாநிலங்கள் கூட கம்மியாக தான் கடன் வாங்கி உள்ளார்கள்.


மூன்றாண்டில் மூன்றேமுக்கால் லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார்கள். 84 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு அவரது நினைவிடத்தில் பேனா வைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 87 கோடி ரூபாய் செலவில் பன்னாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மீது வரியை உயர்த்தி உள்ளார்கள்.

மக்கள் தெளிவாக உள்ளார்கள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் திட்டத்தையும் இந்த ஆட்சியின் திட்டத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். 10 ஆண்டில் எடப்பாடியார் தனது தொகுதியில் எதுவும் செய்யவில்லை என்று இந்த மாவட்ட அமைச்சர் சொல்கிறார்.

சேலத்தின் வளர்ச்சி திட்டங்கள் அமைச்சர் சுற்றி பார்க்க வேண்டும். எஜமான் விசுவாசியாக பேசக்கூடாது பத்தாண்டு பூச்சி மாதிரி இருந்த மாவட்ட அமைச்சர் ராஜேந்திரன் இப்படி பேசுகிறார். சேலத்தில் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை, சேலம் சுற்றுச்சாலை (Ring Road), கால்நடை பூங்கா போன்ற திட்டங்களை எடப்பாடி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றும் முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தில் எடப்பாடியார் ஆதரவு கொடுத்தார் என்று கூறும் நீங்கள் தான் சுரங்கத்தை மாநில அரசு ஏலம் விடும் அனுமதியை தர வேண்டும் என்று கடிதம் எழுதியது

அதே போன்று மருத்துவக் கழிவுகளை டன் கணக்கில் கொண்டு வருகிறார்கள் ஏன் அதை தடுக்கவில்லை? டங்ஸ்டன் ஆகட்டும் மருத்துவக் கழிவு ஆகட்டும், பொதுமக்கள் விழித்துக் கொண்டு போராடியதால் நீங்கள் விழித்துக் கொண்டுள்ளீர்கள் என்றும், தி.மு.க.விற்கு வாக்களித்த மக்களின் கஷ்டம் தீராது மக்கள் நலமோடு இருக்க வேண்டுமானால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும்; 2026 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் முதல்வராக வேண்டும்; ராமாயணத்தில் வரும் லட்சுமணனாய் இருந்து எடப்பாடியார் ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.