ஆன்மிகம்

ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற ராஜகணபதி தீர்த்தக்குட ஊர்வலம் !

 

சேலத்தில் கோலாகலமாக நடைபெற்ற ராஜகணபதி கோவில் தீர்த்தக்குட ஊர்வலம் !

சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு, தீர்த்தக்குடம் ஏந்தி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

சேலம் மாநகரின் முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 30-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின.

இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், செண்டை மேளம் முழங்க, யானை மற்றும் குதிரைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள் நிற உடை அணிந்து தீர்த்தக்குடம் ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம், இறுதியாக ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலை சென்றடைந்தது. அங்கு தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை நடைபெற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி ஸ்ரீ ராஜகணபதியை வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி மற்றும் ஆன்மிக உற்சாகம் நிறைந்திருந்தது.