சேலத்தில் ஆடி பண்டிகை: 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட முளைப்பாரி ஊர்வலம்
சேலம், ஆக. 4:
சேலம் மாவட்டத்தில் ஆடி மாதத் திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பண்டிகையை முன்னிட்டு இன்று பிரம்மாண்டமான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஏந்தி பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை பண்டரிநாதர் மடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பண்டரிநாதர் தெரு, திரு.வி.க. சாலை, மாரியப்பன் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாகச் சென்று, காந்தி மைதானம் பகுதியில் அமைந்துள்ள செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவிலை வந்தடைந்தது.
ஊர்வலத்தின் போது கேரளாவின் பாரம்பரிய கலைநிகழ்ச்சியான கதகளி நடனம், பேண்ட் வாத்தியங்கள், செயற்கை யானை அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடி 18 நிறைவடைந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கரகம் எடுத்தல், பூமிதித்தல் உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.



