ட்ரெண்டிங்

கடையின் உரிமையாளரைக் கொலைச் செய்த முன்னாள் ஊழியர்.... சீலநாயக்கன்பட்டியில் பரபரப்பு!

சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (வயது 48) என்பவர் பழைய வாகனங்களை வாங்கி உடைத்து, இரும்பாக விற்பனை செய்யும் கடையை சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் நடத்தி வருகிறார். சுமார் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கடையில் முனியப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்ததால் முனியப்பனை வேலையில் இருந்து அன்பழகன் நீக்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் கடையில் பணியாற்றிய ஊழியர்கள், இரும்பு பொருட்களின் எடையைச் சரிபார்த்து வெளிமாவட்டங்களுக்கு அனுப்பச் சென்றுள்ளனர். அப்போது, கடையின் உரிமையாளரான அன்பழகன் மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார்.

 

அன்பழகன் கடையில் தனியாக இருப்பதை அறிந்த முனியப்பன், பிளாஸ்டிக் டியூப் மூலமாக அன்பழகனின் கழுத்தை நெரித்து கொலைச் செய்துள்ளார். அத்துடன், கடையில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது கடைக்கு திரும்பிய ஊழியர்கள் முனியப்பனை கண்டு சந்தேகமடைந்தனர். பின்னர் முனியப்பனை பிடித்து வைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அன்பழகன் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

பின்னர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அன்பழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனிடையே சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

 

இதைத் தொடர்ந்து கொலை செய்த முனியப்பனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.