ஆன்மிகம்

கொடியேற்றத்துடன் தொடங்கிய சேலம் கோட்டை மாரியம்மன் ஆடிப்பெருவிழா !

 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்.

சேலம் மாநகரின் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிப்பெருவிழா, இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

விழாவையொட்டி அதிகாலை முதலே கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற யாகத்தைத் தொடர்ந்து, மாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

முன்னதாக, ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை பாரம்பரிய முறைப்படி பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அம்மனை வழிபட்டனர்.விழாவையொட்டி அடுத்தடுத்த நாட்களில் கம்பம் நடுதல், பொங்கல் வைபவம், தீமிதி திருவிழா, உருளுதண்டம், வண்டி வேடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்யும் வகையில், சேலம் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், கோயில் வளாகம் மற்றும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், விழா அமைதியான முறையில் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.