ட்ரெண்டிங்

ஊமத்தைச் செடிகளை சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயிகள்!

அழிந்து வரும் ஊமத்தைச் செடிகளை மீட்டெடுக்கும் விதமாக, அதைப் பயிரிட்டு அதிக லாபம் ஈட்டி சேலம் மாவட்ட விவசாயிகள் அசத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் ஊமத்தைச் செடி அதிகளவில் வளரக் கூடியது. இவை விதைப்புச் செய்யாமல் இயற்கையாகவே சாலையோரங்கள், தரிசு நிலங்கள், ஆற்றங்கரை உள்ளிட்டப் பகுதிகளில் விளைகின்றன. 

இது உமத்தை, ஊமத்தான், வெல்லுமத்தை காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த செடிகள் அழிந்து வரும் நிலையில், நாரணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஒரு ஏக்கர் நிலத்தில் ஊமத்தம் செடிகளை சாகுபடி செய்துள்ளனர். 

செடிகள் நன்றாக வளர்ந்து அதிக அளவில் காய்களைக் கொடுத்து வருகின்றன. இந்த ஊமத்தை செடி இதழ், பூ, காய் என அனைத்தும் மருத்துவப் பயன்களைக் கொண்டது. ஊமத்தைக் காய்கள் மருத்துவத்திற்கு மட்டுமின்றி, யாகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த பயன்பாடுகளால் தற்போது ஊமத்தம் காய்கள், இலைகள், பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்துள்ள விவசாயிகள், இதன்மூலம் அதிக லாபம் ஈட்டி வருவதாக மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.