சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது புளியமரம் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூர், தலைவாசல், மஞ்சினி, பெத்தநாயக்கன்பாளையம், மணிவிழுந்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்நிலையில் தலைவாசலில் இருந்து பெரம்பலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றால் சாலையோர புளியமரம் முறிந்து, அவ்வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது விழுந்தது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்ததுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.



