ட்ரெண்டிங்

சேலம் குமரகிரியில் போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு !

 

குமரகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கோரி சாலை மறியல்: 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு..

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அன்றாடம் சாலையைக் கடக்க வேண்டிய சூழல் நிலவுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேம்பாலம் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை காவல்துறையினர், 

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், போராட்டம் நீடித்ததால் சேலத்தில் இருந்து சென்னை, நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கி, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான விஜய் தமிழர் பார்த்திபன், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொலைபேசியில் பேசி, குமரகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் சீரானது.