ட்ரெண்டிங்

ஏரியில் இருந்து மண் கடத்திய லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

 

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே ஏரியில் இருந்து மண் கடத்திய அ.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

 

ஓமலூருக்கு அருகே உள்ள சிவந்தனூர் பகுதியில் இரவு நேரங்களில் மண் கடத்தப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும், காவல்துறை அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 

தாரமங்கலம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான காங்கேயன், தனது மனைவியான ஊராட்சி மன்றத் தலைவர் வீரம்மாளின் உதவியோடு, மணல் கடத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

 

இதையடுத்து, மணல் கடத்தல் பகுதிக்கு நேரடியாகச் சென்ற பொதுமக்கள், மணல் கடத்திய லாரிகளை சிறைப் பிடித்தனர். அப்போது அங்கு வந்த காங்கேயன் லாரியை மடக்கிப் பிடித்த இளைஞர்களைத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காங்கேயனை பதிலுக்கு தாக்கியுள்ளனர்.

 

தொடர் மோதல்கள் அங்கு நடந்த போதும், அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முன்வராமல், காங்கேயனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

 

இது குறித்து தாரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.